*வரலாற்றுத் தொடர்*2
*பாலியம்*
ஜமாலிய்யா மெளலானா அவர்கள்-
தங்கள் உறவு முறையில் மைத்துனியான அஸ்ஸய்யிதா உம்மு ஹபீபாக் கண்ணே அவர்களை ஹிஜ்ரி 1316 ரஜபு மாதம் பிறை 19 திங்கள் இரவு திருமணம் செய்தார்கள்.
இவர்களுக்கு பிள்ளைகள் இருவர் பிறந்தனர். மூத்த பிள்ளையே நாம் சரித்திரம் கூறும் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்.
குருகுலச் சிந்தை; அருங்கலை வித்தை; பெருந்தவத் தன்மை; உயர்நிலை; பொய்யாமை; வீரம்; அன்பு; அறம் ஆகிய எல்லா உயர் தன்மைகளையும் ஏந்திய நம் சரித்திர நாயகர்- சிறு வயதில் தங்கள் தாயின் அரவனைப்பிலேயே வாழ்ந்து வந்தார்கள்.
ஒழுக்க வழிமுறைகளையும்; திருக்குர்ஆன் திருத்தமாய் ஓதுதலையும்- தங்கள் தாயாரிடத்திலயே கற்றுத் தேர்ந்தார்கள்.
தங்கள் தந்தை நாயகமவர்கள் இலங்கை வந்து- தம் அருந்தவப் புதல்வரை பாரதம் அழைத்துச் சென்று கல்வி கற்பிக்க நாட்டம் கொண்டு தம் மனைவியாரிடத் தெடுத்தியம்பவே; தன் தவக் கொழுந்தை விட்டுப் பிரிய மனம் கொள்ளவில்லை என தாயார் தெரிவிக்கின்றார்கள்.
சினம் கொண்ட தந்தை நாயகம் *உன் சகோதரர்களும்- நீயும் இறக்கக் கடவீர்கள்* என் பிள்ளை என்னோடு வந்து சேர்ந்து கொள்ளும்- என்று கூறிப் பாரதஞ் சென்றார்கள்.
சிறிது காலம் செல்லவே- தம் அருமைத் தாயாரின் சகோதரர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராய் இறையடி சேர்ந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அருமைத் தாயாரும் இறையடி சேர்ந்தார்கள். அப்போது ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்களுக்கு அகவை (வயது) பத்தாயிற்று.
தம்மைக் கண்ணெனப் போற்றி வளர்த்த அன்புத் தாயாரையும்; ஆதரிப்போரையும்- இழந்த மௌலானா நாயகம் அவர்கள் பெருந்துயருற்றார்கள்
அக்காலத்தே வெலிகாமத்திலுள்ள புகாரிக்கலை நிலையிலும்; மாத்தறையில் ஒரு கலைக் கூடத்திலும்-குருகிய காலம் ஆரம்ப அறபுக் கல்வியைக் கற்றார்கள்.
தம் அருந்தவப் புதல்வரின் துயரை அறிந்திருந்த தந்தை நாயகம்- பிள்ளையை அழைத்தமையால்- 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபதாம் திகதி பாரதஞ் சென்றார்கள்.
அப்போது இவர்களுக்கு வயது பதினொரு வருடங்களும்- ஏழு மாதங்களும் இருபத் தொரு நாட்களுமேயாம்.
கருத்துரையிடுக