24/03/2018

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா



பெண்கள் கப்ரு ஸியாரத்துச் செய்யலாமா?

ஸியாரத் செய்வதால் உலகப்பற்று ஒடுங்கி மறுமையின் நினைவு மேலோங்கும் என்றும் பெற்றோர்களை ஸியாரத் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்ல பிள்ளை என்ற பெயர் கிடைக்கும் என்றும் சுற்றத்தார்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகலாம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கும் என்றும் சுவனபதியில் அவர்களின் பக்கத்தில் குடியிருக்கும் வாய்ப்பு அமையும் என்றெல்லாம் கூறி ஸியாரத்தின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பாக்கியம் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் பெண்களாக இருந்தால் கிடைக்காது என்று வாசகமாகவோ சூசகமாகவோ சாடையாகவோ சைக்கினையாகவோ கூறியதாக எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை.

ஆகவே பெண்களும் ஸியாரத் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பெற மிகவும் அருகதை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் ஸியாரத் செய்வது முற்றிலும் தடையானது என்று இருக்குமானால் உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸியாரத்திற்கு சென்றிருக்கமாட்டார்கள். அது போன்றே அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சென்றிருக்கமாட்டார்கள். ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன சொல்ல வேண்டும் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது ஆண்கள் மட்டும் தான் போக வேண்டும், பெண்கள் போகக் கூடாது என்று கூறித் தடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக ஹதீஸில் இல்லை. மாறாக ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள் (அஹ்மத், மிஷ்காத் பக்கம் 154) என்றும் மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் தன் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவுக்குச் சென்று ஸியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 5079, மிஷ்காத் பக்கம் 149) என்றும் ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன ஓத வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருப்பதாகவும் (முஸ்லிம், மிஷ்காத் 154), அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததாகவும் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 572, முஸ்தத்ரக் பாகம் 1 பக்கம் 377) ஹதீஸ்கள் வந்துள்ளன.

பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும் கடும் மனக்கலக்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் தான் பெண்கள் ஸியாரத் செய்வது மக்ரூஹ் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள் என்று மிஷ்காத்(பக்கம் 154 பாபுஸ் ஸியாரத்)தில் குறிபிடப்பட்டுள்ளது.

பெண்கள் ஸியாரத்துச் செய்யும் முறை

உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீப் சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஃபர்தா அணியாமலேயே ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அதில் அடக்கம் செய்யப்பட்ட போது ஃபர்தா அணிந்தே (தன்னை முழுமையாக மறைத்தவர்களாக) ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் 154)

கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search