கப்ர் ஜியாரத் பற்றி சிறு குறிப்பு
"எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது" (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அயலில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.
இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரியார்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கமா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.
"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
ஸியாரத்தின் முறைகளும் பலன்களும்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை ஸியாரத் செய்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டிருப்பது போன்றே பொது கப்ரிஸ்தானங்களுக்குச் சென்று தாங்கள் ஸியாரத் செய்து காட்டி அதன் முறைகளையும் விபரித்ததுடன் அதனால் ஏற்படும் பலாபலன்கள்களையும் நமக்கு எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.
"ஸியாரத்திற்குச் சென்றால், முஃமீன் முஸ்லிம்களில் நின்றும் வீட்டையுடையவர்களே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களாக இருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் சுகத்தைக் கேட்கிறோம் என்று கூற வேண்டும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபா பெருமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 154)
1. "எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)
2. "கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)
3. "இவ்வுலகில் அதிகமான செல்வங்களைத் திரட்டி சுக போகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் உங்களை வீணான விஷயங்களில் ஆழ்த்திவிட்டது. (அது எதுவரை என்றால்) நீங்கள் கப்ருகளை ஸியாரத் செய்கின்ற வரை" (அல்குர்ஆன் 102:1,2) என்று வான் மறை குர்ஆன் ஷரீப் கூறுகிறது.
அன்புச் சகோதரர்களே! மேற்கூறப்பட்ட குர்ஆன் ஆயத்தையும் ஹதீஸ்களையும் நன்றாக உற்று நோக்குங்கள். உலகப் பற்று நீங்கி இதயம் ஒளிமயமாவதற்கு சிறந்த சஞ்சீவிதான் ஸியாரத் என்பதை உணர்வீர்கள். உலகப் பற்று என்றால் என்ன வென்று யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் இவ்வுலகப்பற்று என்பது மரணத்தையும் மறுமை வாழ்வையும் மறந்து விட்டு இவ்வுலகையே சதமாக நம்பி இம்மை இன்பத்திலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தலாகும் என்று எல்லோருக்கும் நன்றாக விளங்கும். இந்த உலகப் பற்று ஒருவனிடம் குடி கொண்டுவிட்டால் நீதி நேர்மை என்றெல்லாம் பார்க்காமல் இவ்வுலக வாழ்வில் இன்பமாக வாழ்வதற்காக பட்டம் பதவியுடன் பவனி வருவதற்காக செல்வமும் செல்வாக்கும் கிட்டுவதற்காக பஞ்சமா பாதகங்களைக்கூட சர்வ சாதாரணமாக செய்யத்துணிந்து விடுகிறான்.
நமது பெரியவர்கள் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று உலகப்பற்றுக்கு சுருக்கமாக உதாரணம் கூறுவதைப் பார்த்திருப்போம். மனிதனின் வாழ்வை சிந்தித்துப் பார்க்கையில்தான் அதன் பேருண்மையை விளங்க முடியாது. ஏனெனில் மேற்படி மூன்றையும் அடைவதற்காக ஹலால் ஹராம் என்று பாராமல் இறை அச்சம் இன்றி எதையும் செய்ய எத்தனித்து விடுகிறான். எனவேதான், "இவ்வுலகப் பற்று அனைத்து விதமான தவறுகளுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (பைஹகீ ஸாதுத் தாலிபீன் பக்கம் 22). வேறொரு அறிவிப்பில் ஈஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறியதாக வந்துள்ளது. (லுக்கதுத்துரர் பக்கம் 83)
அப்படிப்பட்ட உலகப் பற்று என்ற வியாதி ஸியாரத்தின் மூலம் எப்படி நீங்கும் என்று சந்தேகப்படுகிறீர்களா? சந்தேகப்படத் தேவையில்லை. யாரிடமும் கேட்க அவசியமுமில்லை. நீங்கேளே நேரடியாக மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்து அனுபவித்துப் பாருங்கள். ஸலாம் சொல்லுவதடன் மட்டும் நிறுத்திக்கொள்ளும் ஸியாரத்தாக இல்லாமல் சிந்தனைக் கண் கொண்டு ஸியாரத் செய்யுங்கள். சித்தம் தெளிவீர்கள். நேற்று நம்முடன் இருந்தவர் டாம் டீம் என்று இவ்வுலக வாழ்வை கழித்தவர் இதோ ஆறடி நிலத்துக்குள் அடங்கிக் கிடக்கிறாரே, நம்முடைய கதியும் ஒரு நாளைக்கு இப்படித்தானே ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். சன்னம் சன்னமாக உலகப் பற்று மனதை விட்டு நீங்குவதை நீங்களே தெளிவாக உணர்ந்து கொள்வீர்கள். நாதாக்கள் புனித தர்ஹா ஷரீபுக்குச் சென்று ஸியாரத் செய்யுங்கள். அவர்களின் சன்னிதியில் நடைப்பெறும் கணக்கில் அடங்காத கராமத்துக்களையும் அதிசயங்களையும் கண்ணுற்றுப் பாருங்கள். மரணத்திற்குப் பின்னும் அம்மகான்களுக்கு வல்லோன் வழங்கி இருக்கும் வல்லமையைக் கண்டு அதிசயப் படுவீர்கள். அவர்கள் தங்களின் இப்பூவுலக வாழ்வை எப்படியெல்லாம் வணக்க வழிபாட்டிலும் மார்க்க சேவையிலும் கழித்துள்ளார்கள் என்ற விவரங்களை அவர்களின் வரலாறுகள் என்ற வெட்ட வெளியில் உங்களின் சிந்தனைக் குதிரைகளை செலுத்திப்பாருங்கள். அவர்களின் தக்வாவும் நேர்மையும் தன்னலம் கருதா சேவையும் பரிணமிப்பதை கண்டு கொள்வீர்கள். சும்மா படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவைகளைப் படிப்பினையாக எடுத்து படிப்படியாக செயலாக்கம் பண்ணிப்பாருங்கள். நாளடைவில் இறை நெருக்கம் பெற்ற நல்லடியாராக இறை அன்பிற்கு பாத்திரமான அல்லாஹ்வின் நேசராக ஆக அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான். ஆமீன்.
ஸியாரத் செய்வது இவ்வுலகப் பற்று என்ற மாசு நம் மனதிலிருந்து நீங்கி மாண்பாளர்களின் பட்டியலில் சேருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதால் தான் ஆன்மீக பாதையில் வழிநடத்தும் சங்கைக்குரிய ஷைகுமார்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஸியாரத் செய்து வருமாறு உபதேசிப்பதுடன் அதில் அதிகப்படியான ஆர்வமூட்டுகிரார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாரத் செய்துள்ளார்கள்
1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉவுக்குச் சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று ஹதீத் ஷரீபில் (முஸ்லிம் ஷரீப் பாகம் 1 பக்கம் 313, மிஷ்காத் 154) இடம் பெற்றிருக்கிறது.
2.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத் செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபா பெருமக்களும் கண்ணீர் சொறிந்தார்கள். (முஸ்லிம் ஷரீப், மிஷ்காத் 154)
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உஸ்மான் பின் அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)
கருத்துரையிடுக