24/03/2018

மீலாத் விழா ஏன்?


 


மீலாதுந் நபி  விழா ஏன்?

மவ்லவி அலி இப்ராஹீம் ஜமாலி

மீலாதுந் நபி என்று அழைக்கப்பtடும் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து விழா நடத்துவது நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இம்மண்ணில் அவதரித்த புனிதமான அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்விற்காக நம் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்துவதின் அடையாளமாகும். அதை வெளிப்படுத்தியதின் காரணமாக இறை மறுப்பாளானான அபூலஹப் கூட இன்றும் பலன் பெறுகிறான் என்பதிலிருந்து அதன் மகத்துவத்தை நாம் உணரலாம். பெருமானார் (ஸல்)  அவர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்து ஃதுவைபா எனும் தனது அடிமைப்பெண்ணை விடுதலை செய்ததின் காரணமாக ஒவ்வொரு திங்கட்கிழமையும் நரகில் அவனது வேதனை குறைக்கப்படுகிறது என்றால், தம் வாழ்நாள் முழுவதும் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழா நடத்தி மகிழ்வதன் மூலம்; ஒரு முஸ்லிம் எந்த அளவிற்கு நன்மையையும் மேன்மையையும் அடையலாம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

படைப்பினங்களின் காரணரான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பிறந்த தினமான திங்கட்கிழமை தோறும் நோன்பு வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு நோன்பு நோற்பதின் மூலமாக இறைவனுக்கு தம்முடைய நன்றியை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில், அவர்களின் படைப்பே இவ்வவனியில் ஏனைய அனைத்துப் படைப்புகளும் உருவாகுவதற்குக் காரணமாக அமைந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

அதுமட்டுமல்லாமல், மீலாதுந் நபித் திருநாள் நமது உள்ளங்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைவது மட்டுமன்றி சத்திய நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவற்கும் நம்மை ஊக்கப்படுத்துகிறது. ஷரீஅத்தின் அடிப்படையில் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓதுவது  அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் அற்புதமான வணக்கமாகும். 

மீலாதுந் நபி கூட்டங்கள் அனைத்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நமக்கு எடுத்து இயம்புகின்றன. மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நேசத்தைப் புதுப்பிக்கின்றன. இதன் காரணமாகவே, மீலாது விழாக்களில் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி குணங்களும் நல்லொழுக்கங்களும் பண்புகளும்; மற்றும் அவர்களின் அற்புதங்களும் பேசப்படுகின்றன.

மீலாது விழாக்களின் அடிப்படை நோக்கமே, பெருமானார் (ஸல்) அவர்களின் நேசத்தையும் நெருக்கத்தையும் பெறுவதேயாகும். முத்து நபி முஹம்மது (ஸல்) அவர்களை நேசிப்பதும், அவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்துவதும், அவர்களின் நற்குணங்களையும் போதனைகளையும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதும்; ஈமானை அதிகப்படுத்துவதாகும். இன்னும் சொல்லப்போனால், அதுவே ஈமானிய இறை நம்பிக்கையின் அஸ்திவாரமாகும்.

மீலாதுந் நபி விழாவின் ஒரு பகுதியாக சொற்பொழிவுகள், திக்ரு மஜ்லிஸ்கள், மவ்லிது சபைகள் நடத்தப்பெறுவதும், அதன் காரணமாக ஏழைகளுக்கும் எளியோருக்கும் உணவு வழங்கப்படுவதும் நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்துவதற்குரிய அருமையான நல்வாய்ப்பாகும். பெருமானார் (ஸல்) அவர்களை நமக்கு வழங்கியதின் மூலம், கணக்கற்ற அவனின் அருட்கொடைகளை நாம் பெறுவதற்கு நாயன் நம்மை தகுதியாக்கியிருக்கிறான். எனவேதான், அந்த மாபெரும் அருட்கொடையாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து நமக்கு நினைவூட்டுகிறான்.

மனித குலத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்த அருட்கொடைகளுக்கு எல்லைகளோ வரையறைகளோ இல்லை. இறுதிநாள் வரையிலும் அவை தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு அருட்கொடையும் மற்றதைக் காட்டிலும் உயர்ந்ததாகும். இருந்தபோதிலும், அல்லாஹ் தன்னுடைய அருட்கொடைகளைப் புகழ்ந்துரைப்பதில்லை. அல்லாஹ் நமக்குப் பலவகையான உணவுப்பண்டங்களை வழங்கியுள்ளான். ஆனால், அவற்றை அவன் நினைவு கூர்வதில்லை. பல்வேறுபட்ட குடிபானங்களை அவன் அருளியுள்ளான். நாம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் நம்முடைய நேரங்களை நிர்ணயிக்க காரணமாக அமையும் இரவும் பகலும் மாறி மாறி வருவதும், நிலம் - கடல் - ஆகாயம் என அனைத்தையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும், நம்மை அவனுடைய மிகச்சிறப்பான படைப்பாகப் படைத்து நமக்குக் கண்ணியத்தையும் மேன்மையையும் வழங்கியிருப்பதும் அவனது அளவற்ற அருட்கொடைகளாகும்;. ஆனால், அவற்றில் எது குறித்தும் நமக்கு நினைவுப்படுத்துவதில்லை. 

பெற்றோர் உடன்பிறந்தோர் குழந்தைகள் உறவினர்களில் ஆரம்பித்து நமது அறிவிற்கு எட்டாத பலதரப்பட்ட அருட்கொடைகளை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான். இருந்தபோதிலும் அவற்றில் ஒன்றைக்கூட ஏக இறைவன் நினைவுப்படுத்தவில்லை. 

ஆனால், மனிதகுலத்திற்கு அவன் வழங்கிய மாபெரும் ஒரு அருட்கொடை குறித்து நினைவு கூர்ந்து தன்னுடைய இரக்கத்தையும் கருணையையும் வெளிப்படுத்துகிறான். பின்வருமாறு அதை தனது திருமறையில் சொல்லிக் காட்டுகிறான். 
 
‘அல்ல

ாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்’.                                (அல்குர்ஆன்: 3-164)
                                    
மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது ஒரு முஸ்லிமின் அடையாளமாகும். அதன் காரணத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
 
‘உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என்னுடைய அருளைப் பின்னும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என்னுடைய அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள்’.                    (அல்குர்ஆன்: 14-7)
                                    
இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது, மென்மேலும் அருட்கொடைகள் வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைகிறது என்பதை மேற்காணும் வசனம் சுட்டிக்காட்டுகிறது. நன்றியை வெளிப்படுத்துவது என்பது இந்த சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கப்பட்டதல்ல. முன்சென்ற சமுதாயத்தினருக்கும் கடமையாக்கப்பட்டு இருந்தது. உதாரணமாக: இஸ்ரவேலர்களுக்குப் பல்வேறு அருட்கொடைகள் வழங்கி அவற்றின் மூலம் அவர்களை மேன்மையாக்கி வைத்ததையும், ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது குறித்தும் இறைவன் அருள்மறையில் நினைவூட்டுகிறான்.
 
‘அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.       (அல்குர்ஆன்: 2-49)
                
அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவது மாபெரும் அருட்கொடை என்பதையும், அதற்காக பின்வரும் சந்ததிகளும் நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் மேற்காணும் இறைவசனம் தெளிவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், அருட்கொடைகளை அழகிய முறையில் நினைவு கூர்வதும், அதற்காகக் களிப்பையும் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் வெளிப்படுத்துவதும் பின்வரும் சந்ததிகள் அந்த அருட்கொடைகளின் மகோன்னதத்தையும் அவைகளின் முக்கியத்துவத்தையும் உணர்வதற்கும் காரணமாக அமையும் என்பதையும் நம்மால் விளங்க முடிகிறது. 

இறைவன் தமக்கு வழங்கிய அருட்கொடைகளை மனிதன் அவ்வப்போது நினைவு கூர்கிறான். இருந்தாலும் காலத்தின் மாறுதல்களுக்கு ஒப்ப, ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து அந்த அருட்கொடைகளை ஒரு குறிப்பிட்ட நாளில் நினைவு கூரும்போது அது ஒரு கூட்டுத் திருவிழாவாக பரிணமாமம் பெறுகிறது. 

ஃபிர்அவ்னின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்து நைல் நதியைக் கடந்து சினாய் பள்ளத்தாக்கைப் பாதுகாப்பாக அடைந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் கடுமையான வெப்பத்தையும் பஞ்சத்தையும் சந்திக்க நேர்ந்தது. அந்நேரம், அல்லாஹ் மேகத்தை அவர்களுக்கு நிழலிடச் செய்தான். மேலும், மன்னு ஸல்வா எனும் சுவனத்து உணவையும் அவர்களுக்கு வழங்கினான். இது குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
 
‘அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) ‘மன்னு ஸல்வா’ (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்தோம்’.                                    (அல்குர்ஆன்: 2-57)
                                
குறிப்பிட்ட சில சிறப்பான அருட்கொடைகள் இறக்கப்பட்ட நாட்கள் பெருநாட்களாக ஆன விபரங்களை அருள்மறையில் நம்மால் காண முடிகிறது. இது நபிமார்களின் நடைமுறையாக இருந்ததையும் அறிய முடிகிறது. உதாரணமாக: ஈஸா (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினருக்காக இறைவனிடமிருந்து சுவனத்து உணவை யாசித்த பொழுது பின்வருமாறு வேண்டினார்கள். 
 
‘அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா, ‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும் எங்கள் முன் இருந்தவர்களுக்கும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.                        (அல்குர்ஆன்: 5-114)

ஒரு அருட்கொடை இறங்கிய நாள் நன்றி செலுத்தும் நாளாக நினைவு கூரப்பட வேண்டும் என்பதையும், அதுவே நபிமார்களின் வழிமுறையாக இருந்தது என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவாக விளக்குகிறது. மேலும், எந்த இறைத்தூதருக்கு அந்த அருட்கொடைகள் வழங்கப்பட்டனவோ அத்தூதரோ

டு தொடர்புடையவர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது கட்டாயம் என்பதையும் நம்மால் இவ்வசனத்தின் மூலம் நம்மால் புரிய முடிகிறது. 

மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குரிய மற்றோர் வழிமுறை அந்த அருட்கொடைகளை ஏனைய மக்களுக்கும் பிரஸ்தாபிப்பதாகும். 
         
(உங்கள் மீது புரிந்துள்ள) உங்களது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக! 
(அல்குர்ஆன்: 93-11)
                                    
மேற்காணும் வசனத்தின் மூலம், ஒரு அடியான் முதலில் அல்லாஹ் அவனுக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கும் ஆசிகளுக்கும் தன் மனதாலும், நாவாலும் நன்றி செலுத்துவதும், அதை நினைவு கூர்வதும் கடமை என்பதும், அந்த நன்றி அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது என்பதும் தெரிய வருகிறது. அடுத்ததாக, அந்த அருட்கொடைகளை மற்றவர்களுக்கு மத்தியில் பிரஸ்தாபித்து எடுத்துரைப்பதும், அதன் மூலமாக அவர்களுக்கும் அந்த அருட்கொடைகளின் முக்கியத்துவத்தை விளங்கச் செய்வதும் கடமை என்பதும் தெளிவாகப் புரிய முடிகிறது. இவ்வாறு செய்வதின் மூலம், இறைவனை நினைவு கூர்வதற்கான வாய்ப்பை மற்றவர் மனங்களிலும் ஏற்படுத்தித் தந்ததாகிறது.

வல்லான் அல்லாஹ் தஆலா வான்மறையில் விளம்புகிறான்: 
 
‘நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்’.            (அல்குர்ஆன்: 2-152)    
சுருக்கமாகச் சொல்வதென்றால், என்னுடைய அருட்கொடைகளைத் தனித்தனியாக நினைவு கூர்வதுடன் நிறுத்தாமல் மற்ற மக்களும் அவற்றைக்  கேட்டுணரும் விதமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். நன்றியைச் செலுத்தும் வண்ணம் விழாக்கள் நடத்துவது நன்றி செலுத்துதலில் ஒரு வகையாகும். முன்னர் இருந்த சமுதாயங்கள் தங்களுக்கான அருட்கொடைகள் அருளப்பெற்ற நாட்களைப் பெருநாட்களாக, திருநாட்களாக ஆக்கி மகிழ்ந்தனர்.

ஈஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
 
‘அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா, ‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருந்தவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னுடைய (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்.                    (அல்குர்ஆன்: 5-114)                
தற்காலிக அருட்கொடையான ஒரு உணவுத்தட்டு இறங்கிய நாளைப்; பெருநாள் என்று குறிப்பிடுகிறது குர்ஆன். இன்றும் கூட இந்த அருட்கொடை இறங்கிய ஞாயிற்றுக்கிழமையைக் கிறிஸ்துவர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதப்பிறப்பு அந்த உணவுத்தட்டு இறங்கியதை விடக் குறைவானதா என்ன? நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தையும் விட அண்ணல் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களைப் பேரரும் பெருங்கொடையாய்த் தந்த அந்தப் புண்ணியப் புனித நாள் மகத்துவமும் மேன்மையும் மிக்கதல்லவா!

ஒருமுறை யூதன் ஒருவன்; உமர்(ரளி) அவர்களிடம் ‘அமீருல் மூஃமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்’ என்றார். அதற்கு உமர்(ரளி) அவர்கள் ‘அது எந்த வசனம்? எனக் கேட்டார்கள். 
‘இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுப்படுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருட்; கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்’ (அல்குர்ஆன்: 5-3) என்று கூறினார் அவர். ‘இந்தத் திருவசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்று உமர் கத்தாப் (ரளி) அவர்கள் கூறினார்கள்’.                 ஆதாரம்: புகாரி, முஸ்லிம்                        
இங்கே ஒரு கேள்வி எழுகிறது, ‘இஸ்லாமிய மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டு விட்டது’ என்று கூறும் வசனம் இறங்கிய நாள் பெருநாளாகக் கொண்டாடப்படலாம் எனும்போது, மனிதகுலத்தையே முழுமைப்படுத்த வந்துதித்த முழுமதியாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் ஏன் அதை விட சிறப்பான ஒரு தினமாக கொண்டாடப்படக் கூடாது? இது சிந்திக்கும் மக்களுக்குரிய ஒரு சிறந்த வினாவாகும்.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை விட மிகப்பெரிய ஒரு அருட்கொடையை நம்மால் கற்பனை செய்து பார்க்கவும் இயலாது. பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதப்பிறப்பால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் களிப்பையும் வரலாற்றுப் பதிவுகளில் நம்மால் காண முடிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நிறைவான நற்குணங்களையு

ம் மேன்மையான குணநலன்களையும் பேசக் கூடிய பல்வேறு நூல்களில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பின் காரணமாய் அல்லாஹ் வெளிப்படுத்திய மகிழ்ச்சியைக் குறித்து ஏகப்பட்ட உதாரணங்கள் கூறப்பட்டுள்ளன. 

பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் முழுவதும் ஏற்பட்ட அதிசயமான ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகள் குறித்து ஏராளமான கண்ணால் கண்ட பதிவுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக உலகம் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த உன்னதத் தருணம் குறித்தும், அந்த பரக்கத் பொருந்திய நேரத்தில் அல்லாஹ் பொழிந்த கருணையைக் குறித்தும் பல நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன. அந்நேரத்தில் இந்தப் பூவுலகம் முழுவதும் ஒப்பில்லாத் திருநபி (ஸல்) அவர்களின் ஒளியால் ஒளிர்ந்தது; கிழக்கும் மேற்கும் ஜொலித்தன.

இது குறித்து உஸ்மான் இப்னு அபில் ஆஸ் (ரளி) அவர்கள் தம் தாயார் கூறியதாக அறிவிக்கிறார்கள். 
 
‘பெருமானார் (ஸல்) பிறந்த நேரத்தில், அவர்களின் அன்னையார் ஆமினா அவர்களுடன் நான் இருந்தேன். அவர்களின் பிரசவ நேரத்தில் வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் என் மீது விழுந்து விடுமோ’ என அஞ்சக்கூடிய அளவிற்கு நெருங்கி வந்தன. அன்னை ஆமினா அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பிரசவித்தபொழுது ஒரு ஒளி அவர்களிடமிருந்து வெளியானது. அவ்வொளி நாங்கள் இருந்த வீட்டையும் அருகாமையில் உள்ள இடங்களையும் ஜொலிக்கச் செய்தது’.  
  ஆதாரம்: ஷைபானி, தப்ரானி
                    
அபூ உமாமா (ரளி) அவர்கள், ‘யா ரஸ_லல்லாஹ்! தங்கள் நுபுவ்வத் எனும் இறைச்செய்தியின் ஆரம்பம் எது?’ என வினவினார்கள். அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். 
 
‘நான் என்னுடைய தந்தையார் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையா(யின் பதிலா)கவும், ஈஸா (அலை) அவர்களின் சுபச்செய்தியாகவும் இருக்கிறேன். நான் பிறந்த நேரத்தில் என்னுடைய தாயார் தன்னிலிருந்து ஒரு ஒளி வெளியானதைக் கண்டார்கள். அந்த ஒளியால், சிரியா நாட்டில் உள்ள கோட்டைகள் ஜொலித்தன’.  
    ஆதாரம்: முஸ்னது அஹ்மது இப்னு ஹன்பல், ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

    மற்றோர் அறிவிப்பில், அன்னை ஆமினா அவர்கள் தம்மில் இருந்து வெளியான ஒளியின் மூலமாக சிரியா நாட்டில் போஸ்ட்ரா என்ற இடத்தில் இருந்த கோட்டைகளும் சந்தைப்பகுதிகளும் ஒளிரக் கண்டதாகவும், மேலும் அங்கு பயணம் செய்துக் கொண்டிருந்த ஒட்டகங்களின் கழுத்துப்பகுதிகளைக்கூட தம்மால் காண முடிந்ததாகவும் கூறுகிறார்கள்.
            ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அத்தபகாத்துல் குப்ரா

    மேலும் ஹதீஸ் கலை வல்லுனர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கூடும் என்பதை ‘ஆஷ_ரா’ குறித்த ஹதீஸ்கள் மூலம் நிரூபிக்கிறார்கள். அதாவது, ஆஷ{ரா தினத்தன்றுதான் அல்லாஹ் தஆலா மூஸா (அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் ஃபிர்அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தாரின் கொடுங்கோன்மையிலிருந்து காப்பாற்றினான். எனவே, அதற்கு நன்றி செலுத்தும் வண்ணமாக அந்நாளில் நோன்பு வைத்து யூதர்கள் அந்நாளை நினைவு கூர்ந்து வந்தார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்து மதீனா சென்ற நேரத்தில் யூதர்கள் அந்நாளில் நோன்பு நோற்பதைக் கண்டு, ‘மூஸா (அலை) அவர்களுக்கு நான் மிகவும் நெருக்கமானவன்’ எனக் கூறி தங்கள் தோழர்களை அந்நாளில் நோன்பு நோற்கப் பணித்தார்கள்.
                                    ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

    இன்றுவரை உலக முஸ்லிம்கள் யாவரும் அந்நாளில் நோன்பு நோற்பது கண்கூடு. தங்கள் தூதருக்கு வெற்றி கிடைத்த நாளை, அடிமைத்தளையிலிருந்து தாங்கள் விடுதலை பெற்ற நாளை யூதர்கள் பெருநாளாக்கிப் போற்றினார்கள் என்றால், அடிமைத்தளையிலிருந்தும், அநீதத்தின் பிடியிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற, மனித குலத்தை மேம்படுத்த இவ்வவனிக்கு வருகை தந்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைப் போற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலக மாந்தரை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
     
    ‘அன்றி, அவர்களது சுமையையும் அவர்கள் மீதிருந்த (கடினமான சட்ட) விலங்குகளையும் (இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கிவிடுவார்.
                                        (அல்குர்ஆன்: 7-157)

    இறுதியாக, ஒரு இறைநம்பிக்கையாளனுக்குப் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த அந்தப் புனித மாதத்தில் வேறு எந்த அருட்கொடைதான் பெரிதாக இருக்க முடியும்? அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் மற்ற அனைத்தும் அற்பம்தானே? உண்மையான மகிழ்ச்சி என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் பிறப்பிற்காக நம்முடைய களிப்பையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துவதேயாகும்.

    நமக்கு முன்னர் இருந்த சமுதாயங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட சிறிய அருட்கொடைகளுக்கெல்லாம் நன்றி செலுத்தவும், அவர்கள்தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பணிக்கப்பட்டார்கள். ஆனால், கண்மணி நாயகம் (ஸல்) அவர்களோ உலக மாந்தர் அனைவருக்குமான நிரந்தரமான, தொடர்

ச்சியான அருட்கொடையாவார்கள். எனவே இஸ்லாமியர்கள் அனைவரும் அந்த அளப்பரிய அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் விதமாக மங்காத மகிழ்ச்சியோடும் ஈமானிய எழுச்சியோடும் மீலாது விழாக்களை நடத்துதல் வேண்டும்.

    கருணை, இரக்கம், கிருபை மற்றும் அபிவிருத்தியின் மொத்தக் கருவூலமான பெருமானார் (ஸல்) அவர்களைப் பெற்றதின் காரணமாக ஒட்டுமொத்த மனுக்குலமும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. பல நூற்றாண்டுகளாக மடமை எனும் இருளில் மூழ்கி, பல பிரிவினர்களாக வெறுப்புடனும் பகையுணர்வுடனும் சிதறுண்டு கிடந்த சமுதாயத்தை ஒன்றுபடுத்திய, ஒழுங்குபடுத்திய பெருமை பெருமானார் (ஸல்) அவர்களுக்கே உரித்தாகும். இதையே பின்வருமாறு அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
 
‘உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்.                          (அல்குர்ஆன்: 3-103)

    உடைந்த இதயங்களை ஒன்றிணைத்ததும்;, சகோதரத்துவத்தை புதுப்பித்ததும் மனிதகுல வரலாற்றில் ஈடு இணையற்ற சாதனையாகும். அது அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகும். எனவே, அவர்களின் பிறப்பிற்காக நமது நன்றிக்கடனையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது உம்மத்தினர் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமை என்பதில் இருவேறு கருத்திற்கு இடமேயில்லை.






கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search