24/03/2018

ஷமாயிலே முஹம்மதிய்யா
கண்மணி ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய அங்க வர்ணனை

நெஞ்சில் சந்தோஷம் பெருகாதோ
மண்ணில் தெய்வீகம் விளையாதோ
வாசக் கஸ்தூரி தவழாதோ
காணக் கண் தேடி தவிக்காதோ
அண்ணல் நபி அழகை எண்ணி எண்ணிப் பார்த்தால்
ஆனந்தமும் பேரின்பமும் வளராதோ
அற்புதங்கள் சொல்லி சொல்லி முடியாதோ

வெண்மையும் செம்மையும் கலந்த ஓர் நிறம்
நிலவு குடியிருக்கும் பூ முகம்
கன்னம் ரெண்டும் சாய்ந்து தோன்றிடும்
புருவம் அடர்ந்திருக்கும் பூரணம்
இமைகள் நீண்ட திருக் காரணம்
கரு – விழி – கொஞ்சும் அஞ்சனம்
திருவாய் விரிந்தே பொன் மலராகும்
பற்கள் இடைக் கொண்டு ஒளி வீசும்
தாடி அடர்ந்தே பேரெழில் கூட்டும்
தோளில் சரிந்தே நல் முடியாடும்
திருமேனி - ஒரு – காவியம்

அதிக உயரமில்லை மாநபி
அளவு குறைவுமில்லை யாநபி
தோள்கள் விரிந்தவர் தீன்நபி
அதிக சதையுமில்லை நாயகம்
அதிக மெலிவுமில்லை மாதவம்
நெஞ்சம் விரிந்த ஓர் நூலகம்
அங்கங்கள் அழகான அளவாகும்
நெஞ்சோடு வயிறும் தான் சமமாகும்
உள்ளங்கை பாதங்கள் சதையாகும்
குதி கால்கள் சதையின்றி மெலிவாகும்
திருமேனி - ஒரு – காவியம்

உயர இருந்து பள்ளம் நோக்கியே
சரிந்து நடக்கும் நடை போலவே
தோன்றும் நடை என்றும் வேகமே
புயங்கள் இரண்டின் நடுவாகவே
திகழும் நபியின் அடையாளமே
பொன்னோ மின்னோ ஒளி தேகமே
வேர்வையில் கஸ்தூரி மணம் வீசும்
வேறங்கும் காணாத பிரகாசம்
பார்த்தாலே நெஞ்சங்கள் பறிபோகும்
பாதத்தில் என்றென்றும் சரணாகும்
திருமேனி - ஒரு – காவியம்
 

கவி: ஆலிம் புலவர் ஹுசைன் மன்பஈ ஹழ்ரத் அவர்கள்

( ஜம்யிய்யதுல் உலமா சபை )

1 கருத்து:

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search