ஹாஜா! - ஏழைகளை அலங்கரிக்கும் அஜ்மீர் ராஜா!
வடஇந்தியா முழுவதும் அஜ்மீரிலே அமைந்துள்ள ஒரு மெய்ஞானியின் அடக்கஸ்த்தலம் ஆட்சி செய்து கொண்டிருப்பதை நேரில் கண்டேன் என்றார் வரலாற்று பேராசிரியர் எட்வின் அர்னால்ட்.
அகன்று பரந்த நெற்றி! ஆத்மாவே நின்று ஆடிக் கொண்டிருப்பது போன்ற கண்கள்!
ரோஜாவோ, தாமரையோ என்று ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு அழகு முகம்!
இளம் பிஞ்சு உறுதியான பிடரி, அதன் கீழ் தோள், மார்பு, கால்கள் அனைத்திலுமே வயதுக்கு மீறிய லாவகம்! அப்பப்பா அற்புதம்!
நடப்போரின் கவனத்தையெல்லாம் ஈர்த்துக்கொண்டு நடந்து சென்ற அந்த சிறுவரின் கவனம் வழியிலே இருந்த ஒரு மதரஸாவின் வாசலில் நிலை குத்தி நின்றது.
விரைந்து நடந்து அவருடைய கால்களும் பின் வாங்கின!
“முயீனுத்தீன்! விரைந்து நடவும் பெருநாள் தொழுகைக்கு நேரமாகிவிட்டது ” இது தந்தையின் குரல்.
எனினும் மைந்தரின் நடைமுன்னேறியும் அவருடைய முகம் பின்புறமாக திரும்பி கவனிப்பதைப் பார்த்துவிட்டார் தந்தை.
மகனுடைய கவனம் எங்கே செல்கிறது என்று அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
“என்ன முயீனுத்தீன் என்ன ?” தந்தை சிறிது அதட்டலாகவே கேட்டுவிட்டார்.
மைந்தருக்கு தொழுகையின் அக்கரை இருக்க வேண்டுமே என்பது அவரது அக்கரை.
அந்த மைந்தரோ தந்தையின் கரத்திலிருந்து தம் தளிர்க்கரத்தை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தார்.
தந்தையார் வியப்புடன் திரும்பி நின்றார். மைந்தர் அந்த மதரஸாவின் வாசலுக்குச் சென்று புகுந்தார்.
தூண் மறைவிலே ஒளிந்து நின்று கொண்டிருந்த தம் வயதையொத்த ஒரு சிறுவனை கைகளால் பற்றி வெளியிலே இழுத்தார்.
மைந்தரின் செயலை வியப்போடு கவனித்தபடி நின்றிருந்தார் தந்தை.
“முஷ்தாக்! நீ ஏன் பள்ளிவாசலுக்கு வரவில்லை?” இது முயீனுத்தீனின் கேள்வி!
“நீ போ! உன் தகப்பனாரைக் காத்திடச் செய்யாதே, எனக்கு புத்தாடை எதுவும் இல்லை. இருக்கும் ஆடையும் கந்தலாக இருக்கிறது!”
“ஏன் உன் தகப்பனார் வாங்கித் தரவில்லை!”
“இல்லை முயீனுத்தீன், என் தகப்பனார் தான் இறந்து விட்டார்களே! உமக்குத் தெரியாதா? என் தாயார் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.”
முயீனுத்தீனின் கண்களில் கண்ணீர் வடிகிறது. “முஷ்தாக் அணிந்து கொள் என் மேலாடையை” தந்தையைக் கவனித்துக் கொண்டே தமது வெல்வெட் கோட்டை கழற்றி முஷ்தாக்கின் மீது அணிகிறார் முயீனுத்தீன்!
நிலைமையைக் கண நேரத்தில் ஊகித்து விட்டார் கியாஸுத்தீன்.
உள்ளாடையையும் சராயையும் உடுத்துவரும் மைந்தரை ஒரு கையில் பிடித்துகொண்டு வெல்வெட் மேலாடை அணிந்து வரும் அநாதை சிறுவனையும் மறு கையில் பற்றியபடி கியாஸுத்தீன் பள்ளிவாசலை நோக்கி விரைகிறார்கள்.
சுபுஹானல்லாஹி வல்ஹம்ந்து லில்லாஹி……..
கியாஸுத்தீன் அவர்களுடைய உள்ளத்திலே இனம் புரியாத உணர்வுகள் பொங்கிப் பொங்கி வருகின்றது!
“தூயவனே! புகழுக்குரியவனே! இறைவா! இந்த இளமைப் பருவத்திலேயே இளகிய இதயமும் ஏழைகளின் மீது நேசமும் பாராட்டக்கூடிய மைந்தரை எனக்குத் தந்திருக்கிறாய்!
இறைவா எங்கள் நாயகம் ரசூல் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் : ‘இறைவா என்னை ஏழைகளோடு மரணிக்கச்செய்து ஏழையரோடே மறுமையில் எழுப்பு’ என்றார்களே!
இறைவா அந்த நேசரின் நேயரா என் செல்வன்!”.
கியாஸுத்தீன் நன்றிக் கண்ணீர் பார்வையில் துளிரிட பள்ளிவாசல் படிகளை மிதித்தபோது வாசலிலிருந்து ஒரு மஜ்தூப்,,,
(இறைகாதலில் தன்னிலை இழந்த ஞானி) சப்த மிட்டபடி வெளியே ஓடுகிறார்.
கரீபு நவாஸ்……..கரீபு நவாஸ்….கரீபு நவாஸ்! (ஏழைகளை அலங்கரிப்பவர்!)
நன்றி:( மாபெரும் ஜோதி ஹாஜா முயீனுத்தீன் ஷிஸ்தி அஜ்மீரி எனும் எம்.ஏ.ஹைதர் அலி M.A., காதிரி அவர்கள் எழுதிய நூலிலிருந்து நன்றியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது)
கருத்துரையிடுக