கைகளை அறுத்துக் கொண்ட பெண்ணினமே
மாநபியின் மதிமுகத்தைப் பார்த்திருந்தால்
இதயத்தை அறுத்துக் கொள்வீர்களோ?
கனவினிலே நபியைப் பார்த்த ஆஷிக்கீன்கள்
கண்களைக் குருடாக்கிக் கொண்டனரே
அண்ணலாரை தரிசிக்க முடியாத அப்துர் ரஹீம் புரூயி
கண்ணீராய் உருகிப் போயினரே
நாயகத்தைக் காணாத கண்ணென்ன கண்ணோ?
நபியிடம் பேசாத வாயென்ன வாயோ?
மா நபிக்கு உழைக்காத உடம்பென்ன உடம்போ?
மாமதீனா வாழாத வாழ்வென்ன வாழ்வோ?
அன்னையென்ன தந்தையென்ன
சொந்தமென்ன பந்தமென்ன
அண்ணலெங்கள் உயிரின் உயிரானால்...
வானமென்ன பூமியென்ன
வண்ண வண்ணக் காட்சியென்ன?
என்ன என்ன இருந்தென்ன? நபியழகானார்...
1) திட்டமிட்டு இறைவா இன்று படைத்தாய்
அண்ணல் திரு நபியின் திரு முகத்தைக் காட்ட மறுத்தாய்
காலமென்றும் தூரமென்றும் பாலம் அமைத்தாய்
என்னைக் கண்ணீரில் மிதக்க விட்டு பேச மறுத்தாய்
2) தென்றலை நான் தூதனுப்பி சேதி சொல்வேனோ? மதீனா
திசைநோக்கி எப்போதும் காத்திருப்பேனோ?
வெண்ணிலவைப் பார்த்துப் பார்த்து வேண்டி நிற்பேனோ? இன்றி
வேந்தரிடம் கூட்டிச் செல்வாய் என்றழுவேனோ?
3) எனக்குள்ளே நானே நான் பேசிக் கொள்வேனோ? நபிமேல்
ஏக்கம் கொண்ட காதலர் முன் நியாயம் கேட்பேனோ?
ஸஹாபாக்கள் பாக்கியத்தை நினைத்திருப்பேனோ?
அவர்கள் செய்ததென்ன நன்மையென்று வியந்திருப்பேனோ ?
4) சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படித்திருப்பேனோ? அங்கே
சற்று நேரம் சந்தித்து மகிழ்ந்திருப்பேனோ?
நிகழ்ச்சியிலே உள் நுழைந்து நானும் செல்வேனோ? மனம்
நெகிழ்ந்தழுது காகிதத்தை நனைத்திருப்பேனோ?
5) அத்தஹிய்யாத்தில் அமர்ந்து தொழுதிருப்பேனோ?
அஷ்ஹது அன்ன முஹம்மதை நினைத்து சிலிர்த்திருப்பேனோ?
குர்ஆனைத் தொட்டுத் தொட்டு முத்திக் கொள்வேனோ? நபியின்
குணங்களெல்லாம் இதுதானென்று ஒத்துக்கொள்வேனோ?
6) பேரீச்சங் கனியைக் கொஞ்சம் சுவைத்திருப்பேனோ?
உடனே பெருமானின் இனிமை தோன்ற லயித்திருப்பேனோ?
பாலைவன ஒட்டகையைப் பார்த்திருப்பேனோ?
அதன்மேல் பாச நபி உண்டோ என்று பதறிடுவேனோ?
கவி: ஆலிம் புலவர் ஹுஸைன் மன்பஈ ஹழ்ரத் அவர்கள்நாயகத்தை
கருத்துரையிடுக