24/03/2018

மரணித்த பின் நபிமார்கள் உடல் அழியுமா








கப்ரு பிரகாசித்தது

"நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது அவருடைய மண்ணறையின் மேல் ஒளியைப் பார்க்கப்படக்கூடியதாகவே இருக்கிறது என்று நாங்கள் பேசுபவர்களாக ஆகியிருந்தோம்" என்று உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் பாகம் 2 பக்கம் 16 கிதாபுல் ஜிஹாத்)

மரணித்தவர்கள் பற்றி வாஹ்ஹாபிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மற்றவர்களையும் ஸியாரத் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஊட்டுகின்ற ஹதீஸ்கள் அனேகம் இருந்தும் கூட நம்மில் சில (குதர்க்கக்) கொள்கையுடையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வபாத்தாகி அடக்கப்பட்டு சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயிருப்பார்களே, அப்படியிருக்கையில் அவர்களை நாம் ஸியாரத் செய்வதும் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதும் ஸலாம் கூறுவதும் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகம் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளும் மக்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்பதை உணர்ந்த ஸஹாபா பெருமக்கள் நமது சார்பிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த ஐயப்பாட்டை எடுத்து வைத்து அதற்குரிய விளக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை கீழ் வரும் நபி மொழிக் கருத்தின் மூலம் அறியலாம்.

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்

1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)

2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)

3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)

4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)

இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)

மேலும் நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிஃராஜ் இரவில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்தும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்ததும் போதுமான ஆதாரமாகும்.

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

1. பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில் எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது. (அல்குர்ஆன் 34:14)

2. நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தின்னாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது. (அல்கஸாஇஸூல் குப்ரா பாகம் 2 பக்கம் 280)

3. ஹழ்ரத் உஜைர் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 2:259)

4. ஹழ்ரத் யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மீன்விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37:142,143,144)

5. அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை பிடிபட்டது. அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹழ்ரத் தானியால் அலைஹிஸ் ஸலாம் அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது. (அல்பிதாயா வன்னிஹாயா பாகாம் 2 பக்கம் 41)

ஷுஹதாக்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள்

அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

மரணத்திற்குப் பிறகும் இறை நேசர்கள் உயிருடன் இருக்கிறார்கள்

இஸ்லாத்தின் வைரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாட்களால் வெட்டப்பட்ட ஷஹீதுகள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போலவே தன் மனதுடன் போரிட்டு அதைவெட்டி வீழ்த்தி, "மரணத்திற்கு முன்பே மரணமாகிக் கொள்ளுங்கள்." (ஹத்யா ஷரீப் பக்கம் 38) மற்றும், "மரணத்திற்கு முன்பே தவ்பாச் செய்து கொள்ளுங்கள்." (இப்னு மாஜா 1081) என்ற நாயக வாக்குகளை மெய்ப்பித்து தம்மை இறைவனில் அழித்துக் கொண்ட அவ்லியாக்களும் கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், "ஒருவனுக்கு அவன் நப்ஸுதான் பெரிய விரோதி" (நபஸுர் ரஹ்மான் பக்கம் 208) என்றும், "(அந்த) நப்ஸுடன் போராடுபவன்தான் உண்மையான வீரன்" (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 9178, மிஷ்காத் பக்கம் 15) என்றும் கூறியதுடன் இதையே "ஜிஹாதுல் அக்பர் (பெரிய யுத்தம்)" என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். (இஹ்யாஃ பாகம் 3 பக்கம் 7,66)

போர் புரிந்து விட்டு யுத்த களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஸஹாபாக்களைப் பார்த்து, "உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உண்டாகட்டும், சிறிய போரிலிருந்து பெரிய போரின் பால் வந்து விட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெரிய போர் என்றால் என்ன?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "மனதுடன் போரிடுவது தான் பெரிய போர்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறினார்கள்.

காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதுடன் போராடுதல் என்ற பெரியபோரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இறந்தும் இறக்காதவர்

"தன் ஆண்டவனை தியானிப்பவருக்கு தியானிக்காமல் இருப்பவருக்கும் உதாரணமாகிறது உயிரோடு இருப்பவரையும் இறந்தவரையும் போலாகும்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 6023)

இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள்

ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் ஸூரத்து முல்க் (தபாரக்கல்லதீ) ஒதிகொண்டிருக்கும் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது ஸூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பாற்றக்கூடியது என்று கூறினார்கள். (திர்மிதீ, மிஷ்காத் பக்கம் 187)

இறந்தவர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 91 பாபுல் இஸ்ரா, மிஷ்காத் 527)

இறந்தவர்கள் விவாதிக்கிறார்கள்

இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி பாகம் 1 பக்கம் 484 மிஷ்காத் 19)

இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள்

முஃமீன்களே அமல் செய்யுங்கள். ஏனெனில் உங்களுடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் முஃமீன்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் ஸூரத் தவ்பா:106)

உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. (இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387)

இறந்தவர்கள் செவியேற்கிறார்கள்

1. பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி, "எங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நாங்கள் உண்மையாகக் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்ட போது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?" என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன். நீங்கள் நான் சொல்பவைகளை அவர்களை விட மிக நன்றாக கேட்பவர்களாக இல்லை" என்று விடையளித்தார்கள். (புகாரி பாகம் 2 பக்கம் 566, மிஷ்காத் பக்கம் 345 பாபு ஹுக்மில் உஸராஇ)

2. பயங்கரமான இடிசப்தத்தால் இறந்து போன நபர்களிடம் ஸாலிஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பேசினார்கள். (அஃராப் 78,79)

3. ஒரு மய்யித் தம்மை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்பவர்களின் செருப்போசைகளைக் கூட கேட்கிறது. (புகாரி பாகம் 1 பக்கம் 183, முஸ்லிம் பாகம் 2 பக்கம் 372, மிஷ்காத் பக்கம் 24 பாபு இஸ்பாத்தி அதாபில்கப்ரி)

4. அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய இறுதிக் கட்டத்தில் கீழ் வருமாறு வஸிய்யத் செய்தார்கள். என்னை அடக்கம் செய்து என் மீது மண்ணைப் போட்டுவிட்டால் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை பங்கு போடுவதற்குரிய நேரத்தின் அளவுக்கு என் கப்ருக்குப் பக்கத்தில் நில்லுங்கள். ஏனெனில் நான் உங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எனது நாயனுடைய தூதுவர்களிடத்தில் பதிலளிக்க வேண்டியவைகளையும் அறிந்து கொள்வேன். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76 கிதாபுல் ஈமான்)

குறிப்பு : இந்த ஹதீஸ் இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதுடன் கப்ரைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதை இறந்தவர்கள் செவி மெடுக்கிறார்கள் என்பதையும் அறிவிக்கிறது. (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76)

மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்

இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கபான் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். (திர்மிதி, இப்னு மாஜா)

மரணித்தவர்களால் நமக்குப் பயனிருக்கிறதா?

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது அல்லாஹ்வினால் நமக்குக் கடமையாக்கப்பட்ட ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக இலகுவாக்கி இறைவன் சுருக்கி வசதியாக்கித் தருவதற்கு வழிவகை செய்தவர்கள் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள்தான் என்று ஹதீஸ் வந்திருக்கிறது.

2. அதே மிஃராஜ் இரவில் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு ஸலாம் சொல்லிவிட்டதுடன், "சுவர்க்கம் என்பது மணமான மண்ணும் இதமான நீர் சுனைகள் நிறைந்த நிலப்பரப்பாகும். நாம் ஓதுகின்ற சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்ற திக்ருகள்தான் நாளை மறுமையில் சுவனத்தின் சோலைகளாக ஆகி நமக்குப் பயன் அளிக்கும்" என்று கூறி அனுப்பினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 202 பாபு தவாபித் தஸ்பீஹி)

3. புனித பள்ளிவாசல்களில் ஒன்றான பைத்துல் முக்கத்தஸ் பள்ளி வாசலின் கட்டுமானப் பணியை ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கவனித்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. அதன் பின்பும் ஒரு ஊன்று கோளின் பொறுப்பிலே நீண்ட காலம் வரை நிறுத்தாட்டி வைத்து அந்த பள்ளியின் வேலையை இறைவன் பூர்த்தி செய்தான். கரையான் அரித்த அந்த ஊன்று கோல் நொடித்துப் போன போது அதன் பொறுப்பில் இருந்த ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கீழே சாய்ந்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் மரணமாகி நீண்ட காலம் ஆயிற்று என்ற விஷயம் தெரிய வந்தது. (அல்குர்ஆன் 34:14)

4. நிச்சயமாக உங்களுடைய அமல்களை (செயல்களை) மரணித்து விட்ட உங்களின் உறவினர்களிடத்திலும் சொந்தக்காரர்களிடத்திலும் (அவர்களின் கப்ருகளில்) எடுத்துக் காண்பிக்கப் படுகிறது. நல்ல அமல்களாக இருந்தால் அதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். தீய செயல்களாக இருந்தால் இறைவா! உனக்கு கட்டுப்பட்டு நல்லமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை அவர்களின் இதயங்களில் உதிப்பாக்கி வைப்பாயாக என்று பிரார்த்திக்கிறார்கள் என்று (அபுதாவூது, அஹ்மது, இப்னு கதீர் பாகம் 2 பக்கம் 387) ஹதீஸில் வந்துள்ளது.

5. ஸெய்யிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்து விட்டு மக்கள் அனைவரும் திரும்பி விட்டனர். ஆனால் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மாத்திரம் கப்ரில் கேள்வி கேட்கும் மலக்குகளுக்கும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மத்தியில் நடக்கும் சம்பாசணையை செவியேற்பதற்காக கப்ருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். கப்ருக்குள் வந்த இரு மலக்குகளையும் பார்த்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "மலக்குகளே! உங்களிருவரையும் இந்தப் பயங்கரமான கோலத்தில் கண்டபோது பெருமானாரின் பிரதிநிதியான எனக்கே பயம் உண்டாகிவிட்டது. அப்படியானால் சாதாரண முஃமீன்களின் நிலை என்னவாகும். ஆகவே இனிமேல் எந்த முஃமினிடத்திலும் இது போன்ற பயங்கரமான தோற்றத்துடன் வராதீர்கள்" என்றார்கள். இவ்விரு மலக்குகளும், "பெருமானாரின் பிரதிநிதி அவர்களே! உங்களுக்கு நாங்கள் அடிபணிந்தோம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வுலகில் வாழும் போதும் மரணித்த பின்பும் மனிதர்களுக்கு பயனளிப்பவர்களாகவே இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். (நூருல் ழலாம் பக்கம் 18)

எல்லாம் வல்ல ரஹ்மான் ஸியாரத்தின் மூலம் மனத் தெளிவையும் பற்றற்ற நிலையும் அடைந்த நல்லோர்களுடன் நாம் யாவரையும் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்

( நன்றி ; காயல் இஸ்லாம்)  


கருத்துரையிடுக

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search