ஸலவாத் பற்றி இமாம்கள்

ஸலவாத்தின் மகிமை கேளீர்

நம்மில் இராப் பகலாகப் பாவத்தில் அழுந்தாதவர் யார்?

அப்பாவங்களைத் தொலைக்க ஸலவாத்தே அருமருந்தாகும். ஆதலால் நடந்து திரியும் போதும் உட்கார்ந்திருக்கும் போதும் எவ்வளவு அதிகமாக ஸலவாத்தை ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக அதை ஓதிவர முயல வேண்டும். ஷைகுல் மஷாயிகு ஷிப்லி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:-

எனது அண்டை வீட்டார் ஒருவர் இறந்து விட்டார். அவரை நான் கனவிற் கண்டு உமது விஷ­யத்தில் என்ன நடந்தது என வினவினேன். அதற்கவர்
ஷிப்லியே! பெரிய தட்டழிவிற்கு இலக்கானேன். முன்கர் நக்கீர் என்னும் இரு மலக்குகள் என்னை விசாரணை செய்ய வந்த போது பெரும் கலக்கத்திற்குள்ளாகி விட்டேன். அப்பொழுது அல்லாஹ்வே! இந்தத் துன்பம் எங்கிருந்து வந்து என்னைச் சூழ்கிறது? என்ன? நான் இஸ்லாத்தில் மரணமடைய வில்லையா! எனக் கதறினேன்.

அப்பொழுது அந்த இரு மலக்குகளும் என்னை வேதனைக் குள்ளாக்க எண்ணினார்கள். அந்த வேளையில் அவர்களுக்கும். எனக்கும் மத்தியில அழகான மனிதர் ஒருவர் தோன்றினார். அவரிடம் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அவர் எனக்கு சொல்லிக்கொடுத்தார். அந்த மலக்குகளின் கேள்விகளுக்குரிய
விடைகளை நான் கூறினேன்.  பின்னர் அவரை நோக்கி, அல்லாஹு தஆலா உங்களுக்கு  நல்லருள் புரிவானாக! நீங்கள் யார்? என வினவினேன். அதற்கு அவர், ‘நான் நீர் ஓதி வந்த ஸலவாத்துகளினால் படைக்கப்பட்ட ஒரு மனிதன்.

ஒவ்வொரு இக்கட்டான வேளையிலும் உமக்கு உதவியளிக்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது’ என்று கூறினார். மானிடர் இவ்வுலகிற் செய்துவரும் நல்ல அமல்கள் ஓர் அழகான வடிவிலும் தீய செயல்கள் கெட்ட வடிவிலும் உருவாக்கப்படுகின்றன.
‘பலாயிலே ஸதக்காத்து’  என்னும் நூலில் மரித்தோர்களின் நிலை வெகுவிரிவாகக் எழுதிச் சேகரித்து வந்தார். ஆனால் அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு நாமம் வருடங்களில் ஸலவாத்து எழுதுவதில்லை. ஒரு நாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அவர் கனவில் தோன்றி, நீர் என் நாமத்தைச் சொல்லும் போதும் எழுதும் போதும் ஸலவாத்தை ஏன் சொல்வதில்லை? என வினவினார்கள்.  அன்று முதல் அவர் ஸலவாத்து ஓதுவதில் சிரத்தை காட்டி வந்தார்.  சில தினங்கள் கழித்து மீண்டும் அன்னார் அவர் கனவில் தோன்றி ‘உமது ஸலவாத்துகள் என்னிடம் வந்து கொண்டிருக்கின்றன: என் நாமத்தைச் சொல்லும் போதெல்லாம் ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’  என்று  கூறிக் கொள்க என்று கூறிப்போந்தனர்.

அபூ சுலைமான் ஹர்ரானீ (ரஹ்) தமது சம்பவம் ஒன்றைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள். நான் ஒரு தடவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக்  கனவிற் கண்டேன்.  அப்பொழுது அன்னார்
“அபூ சுலைமானே! நீர் ஹதீதுகளைப் பதிவு செய்யும்போது எனது நாமம் வரும் இடங்களில் ‘ஸல்லல்லாஹு அலைஹி ’ என்று ஸலவாத்து மட்டும் கூறுகிறாய்,  ‘வஸல்லம்’  என்று ஏன் சலாம் கூறுவதில்லை. அதில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன.  ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை வீதம் நாற்பது நன்மைகளை அதனால் இழந்து விடுகிறீர்” என்றார்கள்.

இப்றாஹீம் நஸபீ (ரஹ்) கூறுவதாவது:

நான் ஒரு நாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவிற் கண்டேன். அன்னார் என் விஷ­யத்தில் ஒரு விதமான மனத்தாங்கலாயிருப்பது போல் தெரிந்தது.  உடனே நான் அன்னார் திருக்கரத்தைப் பிடித்து முத்தியிட்டு எங்கள் நாயகமே! நான் ஹதீதுக் கலை ஊழியன், சுன்னத்து ஜமாஅத்தைச் சேர்ந்தவன், அன்னிய ஊர்வாசி என்றேன். அன்னார் புன்னகை புரிந்த வண்ணம் என்னை நோக்கி ‘நீர் என் மீது ஸலவாத்துச் சொல்கிறீர், சலாம் சொல்வதில்லை’ என்றார்கள். அன்று முதல் நான் ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ என்று எழுதி வர ஆரம்பித்தேன்.

அபூ சுலைமான் (ரஹ்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவருடைய புதல்வர் ஒருநாள் தமது தந்தையைக் கனவிற் கண்டு அல்லாஹுதஆலா உங்களிடம் எவ்வாறு நடந்து கெண்டான்? என வினவ, அவர் நான் ஹதீதுகள் பதிவு செய்யும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் வரும் இடங்களில் ஸலவாத்தை எழுதி வந்தேன். அதனால் அல்லாஹு தஆலா என்னை மன்னித்து விட்டான் என்று கூறினார்கள்.

ஜஃபர் இப்னு அப்துல்லா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

நான் பிரபல ஹதீதுக்கலை நிபுணர் அபூ ஸர்ஆ (ரஹ்) அவர்களைக் கனவிற் கண்டேன். அவர் வானத்தில் மலக்குகளுக்கு இமாமாயிருந்து தொழுது கொண்டிருக்கிறார். உமக்கு இப்பெரும் பதவி எங்கிருந்து கிடைத்தது என வினவினேன். அதற்கு அவர்,“நான் எனது கையினால் பத்து லட்சம் ஹதீதுகள் எழுதியுள்ளேன். அவைகளில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரு நாமம் வரும் இடங்களிலெல்லாம் ஸலவாத்து எழுதுவது எனது வழக்கம்.  என் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்பவர் மீது
அல்லாஹு தஆலா பத்து ஸலவாத்து (ரஹ்மத்து) அனுப்புகிறான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கின்றாகள்.
அதனால் எனக்கு இப்பதவி கிடைத்தது என்று கூறினார்.

இந்தக் கணக்குப்படி அவர்மீது ஆண்டவன் ஒரு கோடி ரஹ்மத்துச் செய்திருக்கிறான். அவனுடைய ரஹ்மத்து, ஒன்று கிடைத்தாலும் மனிதன் கரை சேரப் போதுமே!  ஒரு கோடி ரஹ்மத்து என்றால் சாமானியமா?

அப்துல்லா இப்னு அப்துல் ஹகம் (ரஹ்) கூறுவதாவது:

நான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைக் கனவிற் கண்டு அல்லாஹு தஆலா உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என வினவினேன். அதற்கு அன்னார் “ஆண்டவன் என் பிழைகளைப் பொறுத்தருளினான்.
எனக்காக சுவனபதியை மணவறை போல் அலங்கரிக்கச் செய்து எனது சிரசிலிருந்து சொர்ணமாரி பொழியப்பட்டது” என்றனர். அப்பொழுது நான் உங்களுக்கு இப்பதவி எவ்வாறு கிடைத்தது? என வினவினேன்.  அதற்கு யாரோ ஒருவர்
‘கிதாபுர் ரிஸாலா’ என்னும் நூலில் அவர் எழுதியுள்ள ஸலவாத்துதான் அவருக்கு இப்பதவியளித்தது என்றார். அது என்ன ஸலவாத்து என்று அவரிடம் நான் வினவினேன். அது
‘ஸல்லல்லாஹு  அலா முஹம்மதின் அதத மா தகரஹுத் தாக்கிரூன், வ அததமா கபல அன் திக்ரிஹில் காபிலூன்’ என்னும் ஸலவாத்து என எனக்கு அறிவிக்கப்பட்டது.
காலையில் என்னிடமிருந்த அந்த நூலை எடுத்துப்பார்க்கும்போது அது அவ்வாறே எழுதப்பட்டிருக்கக் கண்டேன்.

இதே வரலாறை இமாம் முஸ்னீ (ரஹ்) அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளதாக நமீரீ (ரஹ்) போன்றார்கள் அறிவித்துள்ளனர் அது வருமாறு;-

நான் (இமாம் முஸ்னீ), இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களைக் கனவிற் கண்டு  ஆண்டவன் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என வினவ, நான்
‘கிதாபுர் ரிஸாலா’ என்னும் நூலில் எழுதியுள்ள ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் குல்லமா தகரஹுத் தாக்கிரூன்; வ ஸல்லி அலா முஹம்மதின் குல்லமா கபல அன் திக்ரிஹில் காபிலூன்’ என்னும் ஸலவாத்தின் பொருட்டால் என்னை
மன்னித்தருளினான் என்று பதிலளித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்