மஸ்னவி ஷரீபில் உள்ளது என்ன?
(எழுத்து: நாகூர் ரூமி)
ரூமியின் மிகச்சிறந்த படைப்பாக கருதப்படும் மஸ்னவியில் 22,000 பாடல்கள் உள்ளன என்றும் 25,700 பாடல்கள் உள்ளன என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த உலகில் இதுவரை இயற்றப்பட்ட காவியங்களில் அளவிலும் அகத்திலும் பெரியது மஸ்னவி. கிரேக்க மொழியில் இயற்றப்பட்ட ஹோமரின் இலியட், ஒடிஸ்ஸி, இத்தாலிய காவியமான தாந்தேயின் தெய்வீக இன்பியல் (டிவினா கமெடியா), ஆங்கில காவியமான ஜான்மில்ட்டனின் பாரடைஸ் லாஸ்ட் (12 பாகங்கள்) மற்றும் கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்கள் — எல்லாவற்றையும்விட பெரியது மஸ்னவி. ஆறு பிரிவுகளாக அது உள்ளது.
மஸ்னவியில் உள்ள விஷயங்கள் அனேகம். முதலில் நம் கவனத்தைக் கவர்வது கதைகள். கதைகள், கதைகள், கதைகள். நமது பாட்டி சொன்ன கதைகள், ஈசாப் கதைகள், விக்ரமாதியன் வேதாளத்துக்கு சொன்ன கதைகளை மிஞ்சும் கதைகள். எப்படித்தான் ரூமிக்கு எதைச்சொல்ல வேண்டுமென்றாலும் ஒரு பொருத்தமான கதை கிடைக்கிறதோ என்று படிப்பவர் மூக்கில் விரலை வைக்க வைக்கும் அளவுக்கு கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கதைகள் என்று சொல்லிவிட்டேனே தவிர அவை யாவும் கவிதைகளாகவே சொல்லப்பட்டுள்ளன!
மேலும் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் பொன்மொழிகளும், இஸ்லாமிய வரலாற்று நிகழ்ச்சிகளும், தர்க்கம், தத்துவம் ஆன்மீகம் என்று எல்லாம் இணைந்த ஒரே படைப்பு மஸ்னவி. அறுசுவையல்ல. அறுபதினாயிரம் சுவை என்று சொல்லலாம். மஸ்னவியிலிருந்து பல கவிதைகளும் கதைகளும் என்னால் முடிந்த அளவு இங்கே கொடுக்கிறேன்.
பாரம்பரிய மொழியையும், அதுவரை கையாளப்பட்டு வந்த மொழி நடையையும் புரட்சிக் கவிஞர்களின் கவிதைகள் உடைத்தன என்றால் மரபு சார்ந்த சிந்தனையையும் உணர்ச்சிகளையும் ரூமி உடைக்கிறார். மொரமொரப்பாக அப்பிக்கொண்டு கட்டிதட்டிப் போய்க்கிடந்த கட்டுப்பாடுகளை, எல்லைகளைச் சுரண்டி எடுத்து சுத்தப்படுத்தி பளபளப்பாக்குகிறார். கோளத்தின் வெளி விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி பல கோணங்களிலிருந்தும் அணுகி, ரகசியங்கள் என்று சொல்லத்தக்க உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார். இதற்காகத்தான் அவர் கதைகளையும், படிமங்களையும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் பயன்படுத்துகிறார். இந்த வேலையை முக்கியமாக அவர் மஸ்னவியில் செய்கிறார்.
ரூமி சொல்வதெல்லாம் மேற்கத்திய இலக்கியத்தில் இல்லவே இல்லாதது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ரூமி தரும் அளவுக்கு உணர்ச்சிகளில் வேறு எதுவுமே கலக்காத 24 காரட் தூய்மை மேற்கில் இல்லாதது.
உயர்ந்த இலக்கியம் சமைக்க வேண்டும் என்ற பேராவலில் உருவானதல்ல ரூமியின் படைப்புகள். சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானவை அவை. இதைப்புரிந்துகொள்வது மிகமிக முக்கியமானது. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை எந்தவித முன்னேற்பாடுகளுமின்றி கேட்டுக்கொண்ட உடனேயே அல்லது சூழ்நிலைத்தேவைக்கேற்ப பாடப்பட்டவை. பொட்டில் ஆள்காட்டி விரலை வைத்தவண்ணம் சிந்தனை செய்து எழுதப்பட்டவை அல்ல. Poetry is the spontaneous outflow of powerful feelings என்று வொர்ட்ஸ்வொர்த் சொல்வாரே அந்த ரகம். சுருக்கமாகச் சொன்னால் ரூமி என்ற மஹாகவியிடமிருந்து மானிட ஆன்மீக உயர்வு வாழ்வுக்கான உண்மைகள் அல்லது ‘ரகசியங்கள் ‘ இதயபூர்வமாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டன என்பதுதான் சரி.
மஸ்னவியின் தொடக்கம்கூட இப்படி ஆச்சரியமானதுதான். பாரசீக மொழியிலே அத்தார் அல்லது ஸனாயின் காவியங்களைப்போல ஒன்று வேண்டும் என்று அதன் அவசியத்தை சிஷ்யர் ஹுஸாமுத்தீன் எடுத்துரைத்து, அப்படி ஒரு காவியம் எழுத வேண்டும் என்று ரூமியை வேண்டிக்கொண்ட அடுத்த கணமே, புன்னகைத்த வண்ணம் ரூமி தனது தலைப்பாகையைக் கழட்டி அதிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தார். அதில் மஸ்னவியின் முதல் 18 கவிதைகள் எழுதப்பட்டிருந்தன! (அவர் ஒரு தெய்வாம்சம் பொருந்திய இறைநேசர் என்ற உண்மையை இந்த இடத்தில் மறுபடியும் பொருத்திப் பார்க்க வேண்டுகிறேன்).
ரூமியை ஆங்கிலத்தில் இந்த உலகுக்குக் கொடுத்தவர்களில் ஜேம்ஸ் ரெட்ஹவுஸ், பெரியவர் ஆர்.ஏ.நிகல்சன், அவருடைய மாணாக்கர் ஏ.ஜெ.ஆர்பெர்ரி ஆகியோர் முக்கியமானவர்கள்.
ரூமியை மொழிபெயர்ப்பதில் இரண்டுவிதமான பிரச்சனைகளுண்டு. ஒன்று மொழி சார்ந்தது. பாரசீகத்தின் அழகையும் அர்த்தரீதியான சாத்தியக்கூறுகளையும் வேறு மொழியில் கொண்டுவருவது அசாத்தியமானது. இந்த விஷயத்தில் எந்த மொழிபெயர்ப்பும் மூலத்தைவிட ஒருபடி கீழேதான் இருக்கும்.
இரண்டாவது பிரச்சனை முன்னைதைவிட கொஞ்சம் ஆழமானது. இஸ்லாமிய ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஆர்வமோ, பயிற்சியோ அல்லது குறைந்த பட்சம் பாலபாடமோ இல்லாதவர்கள் எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும் அது உயிரற்ற ஆனால் அழகான உடலைப்போல இருக்கும் என்பதுதான் சரி. என் தமிழாக்கத்தைப் பொறுத்து, உயிர் நிச்சயமாக இருக்கும். உடல் மட்டும் ஆங்காங்கு அழகு குறைந்து காணப்படலாம். அதற்கு நான் மட்டுமே பொறுப்பு. என்றாலும் ரூமியை தமிழில் கணிசமான அளவு தந்துவிட வேண்டும் என்ற என் பேரவா என்னை இப்படி எழுத வைக்கிறது. என்ன செய்ய ?
கருத்துரையிடுக